Friday, January 16, 2015

பாடல்கள் வழியே ஒரு பயணம் 1



       

பாதச்சுவடுகள் வழியே உங்கள் அனைவரையும் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

பாதச்சுவடுகள்:  இது ஆண்டவரின் பாதச்சுவடுகள். எப்போதோ படித்த ஒரு நிகழ்வின் நிழலாட்டம் என் கண்களில் விரிகின்றது.

பக்தன் ஒருவன் இறைவனின் கரம் பிடித்து நடந்து கொண்டிருந்தானாம். சேரும் சகதியும் உள்ள ஒரு இடத்தின் அருகில் வந்ததும் சற்று நின்றானாம். கண்மூடித் திறப்பதற்குள் தான் அக்கரையில் நிற்பதை அறிந்தானாம். திரும்பிப் பார்த்து ஒருவரது கால் தடம் மட்டுமே இருப்பதைக் கண்டு "ஆண்டவரே என்னை சேற்றில் நடக்க வைத்து விட்டீரே?" என்று கேட்டானாம்.  பதிலாக கடவுளின் குரல்," அந்த ஒற்றைக் கால் தடம் என்னுடையது. சேற்றில் உன்னை நான்தான் தூக்கிச் சுமந்தேன்" என்று ஒலித்ததாம்.

இந்த நிகழ்வு கற்பனையாகக் கூட இருக்கலாம். இதில் நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடம் ஒன்று இருக்கின்றது. நமது துன்ப துயரங்களில் ஆண்டவர் நம்மை பாதுகாக்கிறார் என்பதே அந்தப் பாடம். நம்பினோர் கெடுவதில்லை என்பது திருமறையின் தீர்ப்பல்லவா?

ஒரு சிறிய கவிதை வரிகளுடன் ஆன்மீகத்துக்கு விடை கொடுப்போம்.

1."உன் பாதச்சுவடுகளில் என் பாதம் பதித்து  உன் கரம் பிடித்து நான் நடந்திட வேண்டும்."

2." உன் திருப்பாத நிழலில் நான் அமர்ந்து இளைப்பாற வேண்டும்".

நெஞ்சில் நிறைந்த நினைவுகள்.

ஏறத்தாழ 70 ஆண்டுகளுக்கு முன்பு  மதுரையில் "ரத்தன்" என்ற ஹிந்தித் திரைப்படத்தைப் பார்த்தேன். இனிமையான பாடல்களுக்காவே ஓடிய படம் அது. தன்னை விட்டுச் செல்லும் காதலனை வழி மறித்து காதலி பாடும் பாடலின் சில வரிகள் இன்னும் என் நெஞ்சில் நிற்கின்றன.

          "அக்கியா மிலாக்கே
           ஆபெரு மாக்கே
           சலோ நஹி ஜானா "

இந்தப் படத்தில் காதலனாக கரண்  திவான்  என்ற வசீகர நடிகரும் காதலியாக சுவர்ணலதா என்ற இனிய குரல் படைத்த பாடகியும் நடித்திருந்தனர். படத்தின் கதை பாட்டுப் புத்தகத்தில் இப்படி எழுதப்பட்டிருக்கும்.  "விளக்கும்  விட்டில் பூச்சியும். விளக்கில் விழுந்தால் செத்து விடுவோம் என்பதை அறிந்தும் விளக்கில் விழுந்து எரிந்து போவது போல, காதலென்னும் நெருப்பில் தங்களை எரித்துக் கொண்ட காதலர்களின் கதை".

ரத்தன் படத்தின் பாடல்கள் தமிழக மக்களின் மனதில் நீங்காத இடம் பெற்றதைப் போல இனிய இசையுள்ள படங்கள் இன்று வரை வரவில்லை. வேண்டுமானால் எஸ் டி பர்மனின்  இசையில் வந்த ஆராதனா என்ற ஹிந்தி படத்தின் பாடல்களை ஒப்பிடலாம்.

மக்கள் மனதில் நீங்காத இடம் பெற்ற தமிழ் படப் பாடல்கள் பற்றி சிறிது விமர்சிக்கலாமே?

ஏழிசை மன்னர் எம் கே தியாக ராஜ பாகவதர் நடித்த ஹரிதாஸ் என்ற படத்தின் மன்மத லீலையை வென்றார் உண்டோ என்ற பாடலைக் கேட்காத பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இதே போல மீரா என்ற படத்தில் எம் எஸ் சுப்புலட்சுமி பாடிய காற்றினிலே வரும் கீதம் என்ற பாடலையும் கேட்காத, பாடாத தமிழர்களே இருக்க முடியாது என்பதும் உண்மையே. இப்பாடலை எழுதியவர் கல்கி என்பது குறிப்பிடத்தக்கது.

கொஞ்சம் பக்தி  ரசத்தையும் சுவைத்திடலாமே?

பக்தியில்தான் எத்தனை வகை? இறைவன் மீது மனிதன் வைத்திருக்கும் இறைபக்தி, குருவின் மேல் மாணவன் வைக்கும் குரு  பக்தி, கணவன் மீது மனைவி கொண்டுள்ள பதி பக்தி, பெற்ற தாய் மீது மகன் வைத்திருக்கும் தாய் பக்தி.

குரு பக்தி ஏகலைவனின் கட்டை விரலை துண்டாடியது. இறைவன் மீது கொண்டுள்ள பக்தியினால் சூடிகொடுத்த நாச்சியார் எனும் பேறு பெற்றாள் அர்ச்சகரின் மகளான ஆண்டாள்.

இப்போது நாம் பார்க்கப்போவது ஒரு மீனவப் பெண்ணின் பக்தி. அவள் பாடிய பாடல் வரிகள் கவிதையாகிறது.

1. சொன்ன சொல்லும் நினைவில்லையா?
மீண்டும் வருவேன் என்று என்னிடம் சொன்ன சொல்லும் நினைவில்லையா?

2. வான் தூதரின் கீதத்தில் மயங்கி மறந்தீரோ?
மீன் வலையை தைக்கும் தையல்தானே என்ற நினைவா?
மனிதரைப் பிடிக்க மீனவரைத்தானே நீர் பிடித்தீர்?
புனிதனே என் மணாளனே என்று நீர் வருவீர்?

3. கதிர் விழுங்கிய மதி உமிழும் கடலும் கொதித்து எழுகின்றதே?
மீனவப் பெண்ணுக்கு இல்லையோ உமையடையும் உரிமை?
தேனவளே என்று அழைத்தாலே அதுவே என் பெருமை.

இத்துடன் இன்றைய நிகழ்வுகளை முடிப்போம். மீண்டும் சந்தித்து நிறைய பேசுவோம்.

அன்புடன்

இரா. விக்டர்.